search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா பயிற்சி"

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜப்பான் மாணவிகள் ராஜகோபுரம் எதிரே ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்தனர். #KalahastiTemple #Yoga
    ஸ்ரீகாளஹஸ்தி:

    சென்னையைச் சேர்ந்த யோகா ஆசிரியரான பாஸ்கர் என்பவர் ஜப்பான் நாட்டில் உள்ளார். அவர், அங்கு யோகா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.

    அவருடைய யோகா மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவிகளில் 50 பேர், 2 நாள் சுற்றுப் பயணமாக ஆந்திரா வந்தனர்.

    அவர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்தனர். ஜப்பான் மாணவிகள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தைச் சுற்றிப்பார்த்தனர். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள தூண்கள், மண்டபங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை பார்த்து வியந்தனர். அந்தச் சிற்பங்கள் அழகிய வடிவில் அற்புதமாக உள்ளதாக ஜப்பான் மாணவிகள் கூறினர்.

    அதைத்தொடர்ந்து ஜப்பான் மாணவிகள் சிவன் கோவிலின் ராஜகோபுரம் எதிரே ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்தனர். இதையடுத்து ராகு-கேது பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். அவர்களுக்கு கோவில் அதிகாரிகள் அனைத்து வசதி ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.  #KalahastiTemple #Yoga
    சர்வதேச யோகா தினத்தையொட்டி திருவாரூர் அருகே அரசு பள்ளியில் நடந்த யோகா பயிற்சியில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார்.
    திருவாரூர்:

    சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருவாரூர் அருகே விளமலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது. இதில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார். இதில் யோகா பயிற்றுனர் பல்வேறு ஆசனங்கள் செய்து காண்பித்தார். அதனை பின்பற்றி கலெக்டர் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் யோகா செய்தனர். இதுகுறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் கூறுகையில்,

    யோகா பயிற்சி மேற்கொள்வதால் ஞாபக சக்தி, ரத்த ஓட்டம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் சிறப்பாக செயல்படும். மேலும் உடல் நலம், மன வளம் மேன்மை அடையும். எனவே அனைத்து தரப்பு மக்களும் யோகாவினால் பல பயன்கள் பெறமுடியும் என்பதால் தினந்தோறும் யோகா செய்ய வேண்டும் என கூறினார். இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி நடைபெற்றது.

    மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, பின்லே மேல்நிலைப்பள்ளி, அரசினர் கலைக்கல்லூரி ஆகியவற்றின் தேசிய மாணவர் படை சார்பில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது. இதில் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதில் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். யோகா பயிற்சி முறை குறித்த கையேடுகளை சுபைதார் ஜெயசீலன் மாணவர்களுக்கு வழங்கினார். முன்னதாக பின்லே தேசிய மாணவர் படை அதிகாரி டேனியல் ராஜாஜி வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அதிகாரி திவாகர் செய்து இருந்தார். முடிவில் அரசினர் கலைக்கல்லூரி என்.சி.சி. அதிகாரி ராஜன் நன்றி கூறினார்.
    கோவை மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா தின பயிற்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    கோவை:

    4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.

    கோவை மாவட்டத்திலும் இன்று பல்வேறு இடங்களில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டது. கோவை வெள்ளிங்கிரி ஈஷா யோகா மையத்தில் 112 அடி ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற சிறப்பு யோகா நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 150 பேர், அதிவிரைவுப்படை வீரர்கள் 400 பேர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் மூலம் சக்தி வாய்ந்த ‘உப-யோகா’ கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைச் சாலைகளிலும் ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

    கோவை அரசு கலை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    வ.உ.சி. மைதானத்தில் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் கோவை பகுதி சார்பாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவை மாநகர காவல் துறை மற்றும் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை சார்பில் அவினாசி ரோட் டில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துணை கமி‌ஷனர்கள் தர்மராஜன் பெருமாள், ஓய்வு பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்தில் மருத்துவ மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இதே போல மாவட்டத்தின் பல இடங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சார்பிலும் யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டன.

    இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த யோகா பயிற்சிகள் தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்ததாகவும், மன அழுத்தத்தை குறைக்க உதவியாகவும் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுமார் 3.75 லட்சம் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். #InternationalYogaDay2018 #Yoga #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு யோகா பயிற்சி மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகமானது. அதன் பிறகு சர்வதேச யோகா தினம் உருவாக்கப்பட்டு உலக நாடுகள் அனைத்தும் யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சர்வதேச யோகா தினமான இன்று குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி நடந்தது.

    குமரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள் என 460-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இப்பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சுமார் 3¾ லட்சம் பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். பள்ளி, கல்லூரிகளின் வரவேற்பு அறை, விளையாட்டு மைதானம், கருத்தரங்கு கூடம் ஆகியவற்றில் இப்பயிற்சி நடைபெற்றது.

    நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடந்த யோகா பயிற்சியில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார். இதனை ஈஷா யோகா மையத்தினர் நடத்தினர். இதில் ஈஷா யோகா மையத்தின் யோகேந்திரன், கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-



    இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு யோகா பயிற்சியும், அதன் பலனும் உலக நாடுகள் முழுவதும் பரவியது. யோகா மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. இது மனதிற்கும், உடலுக்கும் தெம்பு தரும் பயிற்சி ஆகும். இதனை மேற்கொண்டால் மக்கள் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம்.

    இந்தியாவில் சித்தர்களும், ரிஷிகளும் மேற்கொண்ட இந்த பயிற்சி இன்று உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பெருமை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பட வேண்டுமானால் நாட்டு மக்களின் ஆரோக்கியம் முக்கியம். அதனை யோகா பயிற்சி நமக்கு அளிக்கிறது.

    சிறிய நாடான மொராக்கோவில் சுமார் 36 ஆயிரம் மக்களே வசிக்கிறார்கள். நாகர்கோவில் நகரை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு. இங்குள்ள மக்கள் அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுபோல அர்ஜென்டினா நாட்டிலும் மக்கள் யோகா பயிற்சி செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். 170 நாடுகளில் யோகா பயிற்சி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் இன்று யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கலந்து கொண்டார். அவருடன் கல்லூரி டீன் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள், நர்சுகள், பாரா மெடிக்கல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். இதில், போலீஸ் அதிகாரிகள், மகளிர் போலீசார் அனைவரும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதனை பிரம்மகுமாரிகள் அமைப்பு செய்திருந்தது. #InternationalYogaDay2018 #Yoga #PonRadhakrishnan
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    சென்னை:

    ஜூன் 21-ம்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நாசபை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஈஷா யோகா மையம் சர்வதேச யோகா தினத்தை கடந்த 3 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. கோவை, சென்னை, கடலூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

    ஈஷா யோகா மையத்தால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் கைதிகளுக்கு ‘உபயோகா’ எனப்படும் சக்திவாய்ந்த யோகாவை கற்றுக்கொடுக்க உள்ளனர்.

    இந்த யோகாவை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். மூட்டுகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். குறிப்பாக, சிறை கைதிகள் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த யோகா பயிற்சி மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பயன்பெற உள்ளதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    தஞ்சையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற யோகா பயிற்சியில் 340 இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பணியாற்றும் போலீசாருக்கு அதிகளவில் பணிசுமை உள்ளதாகவும், இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர் வரை தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்தன. இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உயர் அதிகாரிகளின் டார்ச்சர் மற்றும் பணிசுமை காரணமாக மன அழுத்தம் போலீசாருக்கு ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டப்படுவதாக தெரிய வந்தது.

    இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அவ்வப்போது யோகா பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த யோகா பயிற்சி காரணமாக மன அழுத்தம் குறைந்து தற்கொலைக்கு தூண்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும் போலீசார் புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உதவுகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் உள்ள இளநிலை போலீஸ் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான யோகா பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் தஞ்சை, வல்லம், திருவையாறு ஆகிய சப்-டிவிசன்களில் இருந்து இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 340 பேர் கலந்து கொண்டனர். காவலர்களுக்கு யோகா செய்வது குறித்த பயிற்சியை திருச்சி யோகா மாஸ்டர் ராமசாமி வழங்கினார்.

    ×